ராணிப்பேட்டை: கமிஷன் கொடுத்தும், 12 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்ற, 94 லட்சம் ரூபாய் வழங்காததை கண்டித்து, பாணாவரம் அருகே விவசாயிகள் ஆர்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மேல்வீராணத்தில் உள்ள, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் முன் நேற்று காலை, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மேல்வீராணம் விவசாய சங்க தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். செயலாளர் மகேஸ்வரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: மேல்வீராணம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், 100 விவசாயிகள் கடந்த ஏப்ரலில், 12 ஆயிரம் நெல் மூட்டைகளை விற்பனை செய்தனர். இதற்கான தொகை, 94 லட்சம் ரூபாயை விவசாயிகளுக்கு இதுவரை வழங்கவில்லை. 

ஆனால் இங்குள்ள அதிகாரிகள், ஐந்து நாட்களில் பணம் கொடுப்பதாக கூறி, ஒரு மூட்டை நெல்லுக்கு, 80 ரூபாய் கமிஷன் தொகையை முன்கூட்டியே வாங்கிக் கொண்டனர். ஐந்து ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி பயிர் செய்து, நெல் மூட்டைகளை இங்கு விற்பனை செய்தும், மூன்று மாதங்களாக பணம் வழங்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார். இது குறித்து, மேல்வீராணம் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளை கேட்டதற்கு, 'விரைவில் விவசாயிகள் கணக்கில் பணத்தை செலுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது' என்றனர்.