அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில்

அமைவிடம் :

உலக பிரசித்தி பெற்றதும், பஞ்ச பூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் ஏகாம்பரநாதர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

மாவட்டம் :

அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்.

எப்படி செல்வது?

காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளது.
கோயில் சிறப்பு :

இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.

கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. 

இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது. 

இத்தலத்தில் தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.

இத்தலத்தில் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒற்றை மாமரம் ஒன்று உள்ளது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத்தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.

பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார்.
கோயில் திருவிழா :

இந்தக் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.

வேண்டுதல் :

இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.

இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

நேர்த்திக்கடன் :

சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திக்கடன்களாக செய்கின்றனர்.

கோயில் பிரசாதம் :

இக்கோயிலில் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கும் கேசரியை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.