அமைவிடம் :
மிகவும் புராதனமான யோக நரசிம்மர் சுவாமி திருக்கோவில் யானைமலை ஒத்தக்கடையில் அமைந்துள்ளது. நரசிம்மர் கோவில்களிலேயே மிகப் பெரும் நரசிம்மரின் மூலவர் விக்கிரகத்தைக் கொண்ட கோவிலாக இந்த யானைமலை ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது.
மாவட்டம் :
அருள்மிகு யோக நரசிம்மர் சுவாமி திருக்கோவில், யானைமலை, ஒத்தக்கடை, மதுரை மாவட்டம்.
எப்படி செல்வது?
இக்கோவில் மதுரை மாநகரில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் ஒத்தக்கடை என்கிற ஊரில் யானைமலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்குச் செல்ல மதுரை மாநகரிலிருந்து பேருந்து வசதிகள், வாடகை வாகனங்கள் வசதிகள் இருக்கின்றன.
கோயில் சிறப்பு :
நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயில்.
ரோமச முனிவர் ஆசையை நிறைவேற்ற பெருமாள் உக்கிர நரசிம்மராக காட்சி தந்தார். அவரது உக்கிரத்தை தணிக்க உலகைக் காக்கும் மகாலட்சுமி தாயார் அங்கு வந்தார். அவர் வந்ததுமே, உக்கிர நரசிம்மரின் கோபம் தணிந்தது. அத்துடன் அவளை ஆலிங்கனம் செய்து யோக நரசிம்மராக கேட்டதையெல்லாம் தருபவராக அருள்பாலித்து வருகிறார்.
மூலவர் யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லி தாயார் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.
இந்த கோயிலில் கொடி மரம் கிடையாது. ஏனெனில் கொடிமரம் என்பது, கருவறைக்கு மேலுள்ள விமானத்தின் நீள அகல அளவைப்பொறுத்தே அமையும்.
இத்தலத்தில் கருவறைக்குமேல் யானைமலை மிகவும் உயர்ந்து இருப்பதால் கொடிமரம் வைக்கவில்லை என கூறப்படுகிறது.
இரு ஒரு குடைவறைக்கோயில். கருவறையும், அதன் முன்னே உள்ள உடையவர், நம்மாழ்வார் உள்ள அர்த்த மண்டபமும் குடைவறை அமைப்புகள் தான்.
திருவண்ணாமலையைப் போலவே இங்கும் பௌர்ணமி கிரிவலம் சிறப்பு.
திருவிழா :
கோயிலை ஒட்டி அமைந்துள்ள தீர்த்தத்தில் மாசிப்பௌர்ணமியில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி கிரிவலம், பிரதோஷ வழிபாடு ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை :
நரசிம்மர் அவதாரம் எடுத்தது தேய்பிறை சதுர்த்தி பிரதோஷ காலத்தில் தான். எனவே, அந்த நேரத்தில் இந்த யோக நரசிம்மரை வழிபட்டால் கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தியாகும். எதிரி பயம் இருக்காது. மரணபயம் நீங்கும்.
தாயார் நரசிங்கவல்லியை இந்நேரத்தில் வேண்டினால் திருமணத் தடை நீங்கும். கோபக்கார கணவன் இங்கு வழிபட்டால், மனைவியை நெஞ்சில் தாங்கும் சாந்த சொரூபியாகி விடுவார் என்பதெல்லாம் நம்பிக்கை.
நேர்த்திக்கடன் :
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் நரசிம்மருக்கும், தாயாருக்கும் வஸ்திரம் சாற்றி தங்களின் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.