அருள்மிகு உலகநாயகி அம்மன் திருக்கோயில்...!!

அமைவிடம் :

2000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரை ஓரத்தில் மிக அமைதியான சூழலில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மகிஷாசுரனுடன் ஒன்பது நாள் போராடி வெற்றி பெற்ற அம்பாள், ஓய்வு எடுக்க சயனகோலத்தில் சுயம்புவாக உலகநாயகி என்ற திருநாமத்துடன் கடற்கரை ஓரமாக காற்று வாங்க தங்கினாள். அவளது பெயரால் இந்த ஊர் தேவிபட்டினம் என பெயர் பெற்றது.

மாவட்டம் :

அருள்மிகு உலகநாயகி அம்மன் திருக்கோயில், தேவிபட்டினம், ராமநாதபுரம் மாவட்டம்.

எப்படி செல்வது?

ராமநாதபுரத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தேவிபட்டினம் காந்தி நகர் ஸ்டாப்பில் இறங்கி சிறிது தூரம் சென்றால் இக்கோவிலை அடையலாம்.

கோயில் சிறப்பு :

அம்பிகை கோபம் குறைந்து சாந்த நிலையில் சுயம்பு வடிவில் இத்தலத்தில் அருள்பாலிக்கிறாள்.

இத்தல அம்மனுக்கு உருவம் எதுவும் கிடையாது அடையாளம் தெரிவதற்காக ஒரு முகத்தை மட்டும் வைத்துள்ளனர்.

அம்மனின் சக்தி பீடங்களில் மதுரை மீனாட்சி ராஜ மாதங்கி சியாமளா பீடம், காஞ்சி காமாட்சி காமகோடி பீடம், காசி விசாலாட்சி மணிகர்ணிகா பீடம் என்பது போல், தேவிபட்டினம் அம்மனின் வீரத்தை பறை சாற்றும் வகையில் வீரசக்தி பீடமாக உள்ளது.

ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் முன் இங்குள்ள மூலவரை ராமர் வழிபட்டு சென்றுள்ளார். மேலும் தோஷ நிவர்த்திக்காக, இங்கு நவகிரகங்களை ராமர் பிரதிஷ்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவை கோயிலின் சிறப்புகளாகும். 

கடல் நடுவே அமைந்துள்ள நவபாஷாணம் எனப்படும் நவகிரகங்கள் இத்தலத்தில் அமைந்துள்ளது. இவை கரையிலிருந்து சிறிது தொலைவில் கடலுக்குள் அமைந்துள்ளன. இந்தியாவிலேயே இங்குதான் கடலில் நவகிரகங்கள் உள்ளன.

கோயில் திருவிழா :

நவராத்திரி, பௌர்ணமி ஆகியவை விசேஷ தினங்களாகும்.

வேண்டுதல் :

எடுத்த செயலில் வெற்றி பெற இத்தலத்து அம்பாளை வணங்கி வரலாம். நவராத்திரி நாயகியான இந்த தேவியை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்கள், மன தைரியம் இல்லாதவர்கள், எதிரி தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வீரசக்தி பீடமான இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன் :

சுயம்பு மூர்த்தியான இத்தல அம்மனுக்கு பலவகையான அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.