2000ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி தமிழ் கவிஞர் தாராபாரதி மறைந்தார்.

முக்கிய தினம் :-

உலக வலசை போதல் தினம்
பறவைகளின் இடப்பெயர்வையே வலசை போதல் என்கிறார்கள். பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன.

அவ்வாறு செல்லும் பறவைகளைப் பாதுகாத்தல், அதன் இருப்பிடத்தைப் பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த 2006ஆம் ஆண்டிலிருந்து மே இரண்டாவது வாரம் இறுதியில் (மே 12 மற்றும் 13) கடைபிடிக்கப்படுகிறது.


நினைவு நாள் :-

தாராபாரதி
✍ தமிழகத்தை சேர்ந்த கவிஞர் தாராபாரதி 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் 'குவளை' என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன்.

✍ 34 ஆண்டுகள் ஆசிரியர் பணி சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழ்நாடு அரசு 2010-2011ஆம் ஆண்டில் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

✍ புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல்நுனி வெளிச்சங்கள், கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள் ஆகியவை இவரது படைப்புகளாகும். கவிஞாயிறு என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படும் இவர் தன்னுடைய 53வது வயதில் 2000ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-

பக்ருதின் அலி அகமது
இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவரான பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.

1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இரண்டு முறை அசாம் சட்டமன்றத்திற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடுவண் அமைச்சரவையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் குறிப்பாக உணவு மற்றும் வேளாண்மைத் துறை, கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை மற்றும் நிறுவன சட்டங்கள் போன்ற துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார். 1967-ல் அகில இந்திய மட்டைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1974-ல் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்று, இறக்கும் வரை பதவியில் இருந்த பக்ருதின் அலி அகமது தனது 71வது வயதில் (1977) மறைந்தார்.