ராணிப்பேட்டை தலைமையிடமாக கொண்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் 5 மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் வேகம் அதிகம் இருப்பதால் பிற நோயுடன் உள்ள கரோனோ நோய் தொற்றாளர்கள் மற்றும் கரோனா நோயின் தீவிரம் காரணமாக ஆக்ஸிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக தமிழக அரசு மாநில அளவிலான கட்டளை மையத்தினை ஏற்படுத்தி அதன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட சீரிய முயற்சியின் காரணமாக கரோனோ நோயாளிகளுக்கு சிலிண்டர் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களை ஒருங்கிணைத்து அனுமதிக்கப்பட்ட ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிலிண்டர் ஆக்சிஜன் வழங்கலை ஒழுங்குபடுத்திட ராணிப்பேட்டை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இயங்கும். காவேரி கார்பானிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக சிலிண்டர் ஆக்ஸிஜன் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.