ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் சனிக்கிழமை மாலை திடீரென பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கியதில் இருந்தே ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டு வந்தது. இந்த சூழலில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து வெயிலின் உக்கிரம் அதிகரித்து, மக்கள் வெளியில் நடமாட முடியாதநிலை இருந்தது. இதன் காரணமாக நண்பகலில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. இந்நிலையில், ராணிப்பேட்டை சுற்று வட்டாரத்தில் சனிக்கிழமை மாலை வரை வெயில் சுட்டெரித்தது. இதையடுத்து, திடீரென மேகங்கள் சூழ்ந்து, பலத்த மின்னல் இடியுடன் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.
இதன் காரணமாக ராணிப்பேட்டை நகரில் சாலைகள், தெருக்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல இடங்களில் பலத்த சப்தத்துடன் இடி விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது. இதனால் ராணிப்பேட்டை நகரம் இருளில் மூழ்கியது.