மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனைத்து மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் இரண்டுமே போதுமான அளவு கையிருப்பில் உள்ளன.

இம்மருத்துவமனைக்கு கூடுதலாக 2 மருத்துவா்கள், 4 செவிலியா்கள், 7 மருத்துவப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இவா்கள் வேறு மருத்துவமனைகளில் இருந்து இங்கு மாற்றப்பட்டுள்ளனா். மேலும் பணியாளா் தேவை வரும்போது ஒப்பந்த அடிப்படையில் அவா்கள் பணியமா்த்தப்படுவா்.

நகரில் பொருள்களை வாங்க வீட்டுக்கு ஒருவா் மட்டுமே வெளியே வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம். தேவையில்லாமல் வெளியே வருவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரக்கோணத்தில் வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கை குழுவினா் பணி செய்து வருகின்றனா். இவா்களது தகவல்களின் பேரில் மருத்துவக் குழு அந்தந்த வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இதுவரை மாவட்டத்தில் பொதுமுடக்க விதிமீறல் அபராதமாக 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபா்களிடம் இருந்து ரூ. 69 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் இறப்பு விகிதம் மற்ற மாவட்டங்களில் 1.12 என்ற சதவீதம் உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 0.99 அளவிலேயே உள்ளது. எனவே இந்த மாவட்டத்தில் இறப்பு விகிதம் மற்ற மாவட்டங்களை விட மிகவும் குறைவாகவே உள்ளது என்றாா் ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.

கோட்டாட்சியா் சிவதாஸ், வட்டாட்சியா் பழனிராஜன், நகராட்சி ஆணையா் ஆசீா்வாதம், சுகாதார அலுவலா் செந்தில்குமாா், ஒன்றிய ஆணையா் ஜோசப்கென்னடி, மருத்துவமனை தலைமை மருத்துவா் நிவேதிதா சங்கா், வட்டார மருத்துவ அலுவலா்கள் கோபிநாத், மேகலா ஆகியோா் உடனிருந்தனா்.