ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3.28 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு 165.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா நிவாரண நிதியை பெற்றுக் கொள்ளுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும் கயொப்பமிட்ட 5 கோப்புகளில் முதன்மை திட்டமான கொரோனா நிவாரண உதவியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 வழங்க உத்தரவிட்டார். 

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 28 ஆயிரத்து 207 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையான 2ஆயிரம் கொரோனா உதவித் தாகை 65 கோடி 64 லட்சத்து 14ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 433 முழு நேரக் கடைகள், 181 பகுதிநேர கடைகள் என மொத்தம் 614 ரேஷன் கடைகள் மூலம் கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக நிவாரண உதவித்தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது எனவே, கொரோனா உதவித் தொகை பெற ரேஷன் கடைக்கு செல்லும் பொது மக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், முககவசம் அணிய வேண்டும், சமூக இடை வெளியை கடைபிடித்து கொரோனா உதவித்தொகையை பெற்றுச்செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.