ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் எஸ்பி சிவக்குமார் உத்தரவு 
ராணிப்பேட்டை எஸ்பி சிவக்குமார் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு பெட்டிகள் அனைத்தும் வாலாஜா டோல்கேட் அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

256 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாளை வாக்கு என்னும் பணி நடைபெற உள்ள நிலையில், வேலூர் சரக டிஐஜி காமினி அறிவுறுத்தலின்படி ராணிப்பேட்டை எஸ்பி சிவக்குமார் தலைமையில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 4 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 17 இன்ஸ் பெக்டர்கள், 66 எஸ்ஐக்கள், 405 காவலர்கள் மற்றும் ஒரு கம்பெனி துணை ராணுவப் படையினர் மூன்று அடுக்கு பாதுகாப்பு முறையில் பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர். 

வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனை வரும் தங்களது அடையாள அட்டை மற்றும் கொரோனா தடுப்பூசி இரண்டு முறை போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை தங்களுடன் கொண்டு வர வேண்டும். வாக்கு எண்ணும் மையத் திற்கு வருவோர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், கூர்மையான ஆயுதங்கள், குத்தூசி, பிளேடு போன்றவற்றை எடுத்துவரக் கூடாது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வாக்கு எண்ணும் பணி முடியும் வரை யாரும் வெளியே செல்லக்கூடாது. வாக்கு எண்ணும் மையத் திற்கு வருவோர் செல்போன் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.