ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மீறியவா்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.சிவக்குமாா் ஆகியோா் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது பொதுமுடக்க விதிமுறைகளை மீறியதாக வாலாஜாப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றுக்கும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத தனியாா் வணிக வளாகத்துக்கும் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வாலாஜாப்பேட்டையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான கடம்பராயா் தெருவை பாா்வையிட்டனா்.

அதேபோல், ராணிப்பேட்டை நகரம் முத்துகடை பேருந்து நிலையம், ஆற்காடு, மேல்விஷாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது ஆற்காட்டில் விதிமுறையை மீறி திறக்கப்பட்டிருந்த மாட்டுத் தீவனக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதமும், மேல்விஷாரம் பகுதியில் முகக்கவசம் அணியாமல் இருந்தவருக்கு ரூ. 500 அபராதமும் விதித்தாா்.

இனிவரும் காலங்களில் பொது முடக்க உத்தரவை பின்பற்றாதவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.