வேலூர் சரகத்தில் உள்ள நான்கு மாவட்ட காவல் துறையினர் கரோனா ஊரடங்கு காலத்தில் எவ்வாறு பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என்ற 11 அறிவுரைகளை டிஐஜி காமினி அவசர சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.
வேலூர் சரகத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கரோனா ஊரடங்கு காலத்தில் காவல் துறையினரின் பணிகள் தொடர்பாக, வேலூர் சரக டிஐஜி காமினி சுற்றறிக்கை ஒன்றை இன்று (மே 13) அவசரமாக அனுப்பியுள்ளார்.

கரோனா ஊரடங்கு காலத்தில் காவலர்கள் பாதுகாப்புடன் பணியாற்றுவதுடன் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பணியாற்றுவது குறித்து 11 அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அதில்,

"1. காவலர்கள் தங்கள் உடலின் மீது அக்கறை கொண்டும், குடும்பத்தினருக்கு கரோனா தொற்று ஏற்படாத வகையிலும் பணிபுரிய வேண்டும்.

2. காவலர்கள் தங்கள் உடைகளை தினமும் சுத்தமாக துவைத்து உடுத்த வேண்டும். அவ்வப்போது தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

3. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.

4. உடல்நிலை சரியில்லாமல் அல்லது தொற்று அறிகுறி தெரியும்போது உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டும்.

5. உடல்நிலை சரி இல்லாத காவலர்கள் குறித்து சக காவலர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

6. ஒலிப்பெருக்கி/தண்டோரா மூலமாக அவரவர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கரோனா சம்மந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

7. பொதுமக்களை கண்ணியமான முறையில் அறிவுறுத்தியும், பிற அரசுத்துறைகளில் பணிபுரியும் அலுவலர்களிடம் கனிவான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.

8. வாகன சோதனையின்போது பொதுமக்களிடம் மிகவும் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.

9. பெரும் குற்ற வழக்குகளில் ஈடுபடும் குற்றவாளிகளை மட்டும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

10. தற்போது அரசு மதுபானக்கடைகள் மூடபட்டுள்ளதால் இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்ய முயற்சி செய்வதை தடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

11. சாராய வழக்குகளில் கையூட்டு பெற்று காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் காவலர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு அதில் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, டிஐஜி அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, "கரோனா தொற்றில் இருந்து காவலர்களைப் பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் முகக்கவசம், ஃபேஸ் ஷீல்டு, கையுறைகள், சானிடைசர் உள்ளிட்டவை வாங்க வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரூ.7 லட்சம் வீதம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காலத்தில் சில காவல் துறையினர் காவல் துறைக்கு களங்கும் ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனர். எனவே, இந்தாண்டு அதுபோன்று நடைபெறாமல் இருக்க டிஐஜி காமினி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக, சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள், சாராயம் காய்ச்சுபவர்களிடம் கையூட்டு பெறும் காவலர்கள் குறித்த புகார்கள் வரப்பெற்றால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் அவர்கள் வேலூர் சரகத்தில் பணியாற்ற முடியாது என்று உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவித்தனர்.