வாணியம்பாடி அருகே சின்ன மோட்டூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி (18) என்ற இளைஞர் டிராக்டரை ஓட்டியபடி செல்பி எடுத்த போது டிராக்டர் கிணற்றில் பாய்ந்ததில் உயிரிழந்தார்.

சின்ன மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகன் சஞ்சீவி. உறவினர் ஒருவருடன் அருகிலுள்ள ராஜேந்திரன் என்பவரின் நிலத்துக்கு சென்றுள்ளார். அவர் டிராக்டரில் ஏர் உழுதுவிட்டு வண்டியிலேயே சாவியை விட்டு விட்டு உணவு அருந்த சென்றுள்ளார்.

அதில் ஏறி அமர்ந்தபடி செல்பி எடுத்த சஞ்சீவிக்கு, ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. அதனை வீடியோவாக எடுத்து வாட்ஸப் ஸ்டேட்டஸில் வைக்கலாம் என நினைத்துள்ளார்.

 அப்போது டிராக்டர் தறிகெட்டு ஓடி விவசாய நிலத்திலிருந்த தரை கிணற்றில் பாய்ந்தது. சஞ்சீவியும் உடன் விழுந்தார்.
உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கும், அம்பலூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி தேடிய போது சஞ்சீவியை கண்டுபிடிக்க முடியவில்லை. மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றிவிட்டு பார்த்த போது இளைஞன் இறந்திருந்தார். அவர் உடலையும் டிராக்டரையும் மீட்டனர். இச்சம்பவம் வாணியம்பாடி வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.