தமிழகத்தில் பெருகி வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம் என சுகாதாரத் துறையினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த 10-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முக்கியச் சாலைகளில் தடுப்புகளை அமைத்த காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு 800-க்கும் மேற்பட்ட காவலர்கள் நகர் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். வேலூர் கிரீன் சர்க்கிள், செல்லியம்மன்கோயில், பேலஸ் கபே, பழைய பேருந்து நிலையம், அண்ணாசாலை சந்திப்பு, டோல்கேட், தொரப்பாடி எம்ஜிஆர் சிலை, பாகாயம், வேலப்பாடி, ஆரணி ரோடு, ரவுண்டானா, ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரி, வள்ளலார், அலமேலு மங்காபுரம், விருதம்பட்டு, சித்தூர் பேருந்து நிலையம், குடியாத்தம் கூட்டுச்சாலை, வள்ளிமலைக்கூட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்துத் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டது. அவசியமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களை எச்சரித்த காவல் துறையினர் ஒரு சிலரிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். வேலூர் நகர் பகுதியில் மட்டும் இன்று ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

அதேபோல, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வேலூர், சத்துவாச்சாரி, காட்பாடி, தொரப்பாடி, ஓட்டேரி, விருபாட்சிபுரம், சங்கரன்பாளையம், வேலப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனை இன்று வழக்கம்போல களைகட்டியது. இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் இறைச்சி விற்பனை செய்த பகுதிகளுக்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள் தடையை மீறி விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 130 கிலோ இறைச்சியைப் பறிமுதல் செய்து 15-க்கும் மேற்பட்ட இறைச்சிக்கடைகளுக்கு சீல் வைத்து, அபராதம் விதித்தனர்.

மருத்துவமனை, அத்தியாவசியத் தேவைக்காகச் சென்றவர்களை காவல் துறையினர் விசாரணை செய்து அனுப்பி வைத்தனர். கிராமப்பகுதிகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வலம் வந்தபடியே இருந்தனர். அதேபோல, கிராமப் பகுதிகளில் காய்கறி, மளிகை உள்ளிட்ட ஒரு சில கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

நியாய விலைக்கடைகளில் கரோனா நிவாரண தொகை இன்றும் வழங்கப்பட்டதால் அதை வாங்க சென்ற பொதுமக்களை காவல் துறையினர் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் மாவட்டம் முழுவதும் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை முத்துக்கடை, வாலாஜா சுங்கச்சாவடி, ஆற்காடு பேருந்து நிலையம், சோளிங்கர் மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். சாலைகளில் விதிமுறைகளை மீறி சுற்றித் திரிந்தவர்களிடம் இருந்து வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.