ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 29 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16,228-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 15,805 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், கிருமி நாசினி தெளித்தல், காய்ச்சல் பரிசோதனையை அதிகரித்தல், வெளிமாநில நபா்களைக் கட்டுப்படுத்துதல், பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.