ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது . இதையொட்டி மாவட்டத்தில் 3 இடங்களில் தனிமை படுத்தும் முகாம்கள் அமைத்து அதில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது .

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவிவருகிறது . 299பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . 

பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதனால் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கைவசதி இல்லாததால் மீண்டும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைத்து அதில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடு பட்டுள்ளது. 

முதற்கட்டமாக அரக்கோணம் , வாலாஜா , ஆற்காடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 100 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணியில் வருவாய் மற்றும் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர் . 

இதுகுறித்து சுகாதார துறையினர் கூறுகையில் , ' ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 வது கொரோனா அலை வேகமாக பரவி வருகிறது . எனவே பொது மக்கள் , அரசு அறிவித்துள்ள கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் . கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது . 

45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் . இதற்காக அரக்கோணம் , சோளிங்கர் , வாலாஜா , ஆற்காடு , கலவை ஆகிய 5 அரசு மருத்துவமனைகளிலும் , 36 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது .

பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் . மேலும் 30 மினி கிளினிக்கிலும் கொரோனா தடுப்பூசிபோட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இதேபோல் மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் ' என்றார்.