ஆற்காடு அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வருவாய் துறை சார்பில் நேற்று நிவாரண உதவி வழங்கப்பட்டது.

ஆற்காடு அடுத்த புதுப்பாடி உள்வட்டம் சக்கரமல்லூர் சாவடித் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், கூலி தொழிலாளி. இவரது கூரைவேய்ந்த குடிசை வீடு நேற்று பகல் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

இதைக் கண்ட குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். தொடர்ந்து அக்கம்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து மண் மற்றும் தண்ணீரை வீசி எறிந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. 

இதில் வீட்டில் இருந்த தட்டு முட்டு சாமான்கள் உட்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து தகவலறிந்த ஆற்காடு தாசில்தார் காமாட்சி உத்தரவின்பேரில் விஏஓ வெங்கடேசன், கிராம உதவியாளர்கள் ராஜசேகர், மதன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட வெங்கடேசன் குடும்பத் தினருக்கு வருவாய்த்துறை சார்பில் இலவச வேட்டி, சேலை, அரிசி, சர்க்கரை, பருப்பு, கெரோசின் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல்கூறினர்.