நடிகர் விவேக் மறைவுக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் டாக்டர் சிவகுமார் இரங்கல் கவிதை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரைப்பட நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று காலை உயிரிழந்ததார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் இரங்கல் கவிதையை வெளியிட்டுள்ளார்.

‘இரக்கமில்லா இயற்கை - விண்ணோடு விவேக்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள 

‘‘பகுத்தறிவும் நகைச்சுவைக்கும் பசையாக இருந்தவன்,

ஜாதி, மத, சமூகக் கேடுகளுக்கு பகையாக இருந்தவன்,

கண்டதை எல்லாம் சொல்லி - எள்ளி - சிரிக்க வைக்காமல்
கருத்தைச் சொல்லி சிரிக்க வைத்தான்,

சிந்திக்க வைத்தான்.
கிண்டல் கேலி செய்வதிலும் கூட
பிறர்மனம் புண்படாமல் எல்லை வகுத்திட்ட நகைச்சுவை நாயகன்,

பசுமை கலாம் திட்டத்தினால் வெப்பச் சுமை குறைத்தவன்,

வெடிச்சிரிப்பை உருவாக்கி மனச்சுமையை குறைத்தவன்,

லட்சோப லட்சம் மரக்கன்று நட்டவனை - இன்று -
இலட்சியத்தோடு சேர்த்துப் புதைக்கின்றது
இரக்கமில்லா இயற்கை.

எங்கள் கண்ணீரை உமக்கும் உமது செடிகளுக்கும்
காணிக்கை ஆக்குகிறோம்,

விண்ணோடு விவேக், மண்ணோடு பசுமை’’ என குறிப்பிட்டுள்ளார்.