வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் பெண் காவலர்கள் ரோந்து செல்வதற்கான இருசக்கர வாகனத்தை பெண்காவலர்களுக்கு டிஐஜி காமினி வழங்கினார். உடன் எஸ்பி செல்வகுமார்.

வேலூர் மாவட்டத்தில் பெண்கள் அளிக்கும் புகார்களை சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்க ரோந்து குழு அமைத்து 15 பெண் போலீசாருக்கு மொபட்களை டிஐஜி காமினி வழங்கினார். 

மத்திய, மாநில அரசு நிர்பயா நிதியின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக நேரிடையாகவோ அல்லது 181, 1098 மையங்கள் மூலமாகவோ கலெக்டர் அலுவலகத்தில் இருந்தோ, அல்லது எஸ்பி அலுவலகத்தில் இருந்து பெறப்படும் அனைத்து புகார்களின் மீது உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவிட்டார். 

அதன்பேரில் மாவட்டம் தோறும் 'பெண்கள் உதவி மையம்' துவக்கப் பட்டுள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 15 முக்கியமான காவல் நிலையங்களில் தலா ஒரு பெண் காவலர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. 

நிகழ்ச்சிக்கு வேலூர்சரக டிஐஜி காமினி தலைமை தாங்கி, 15 பெண்காவலர்களுக்கு இருசக்கர வாகனம் மற்றும் லேப்டாப் வழங்கி பணியை தொடங்கி வைத்தார். அப்போது எஸ் பி செல்வகுமார், ஏடிஎஸ்பி மதிவாணன் மற்றும் போலீசார் உடனிருந் தனர்.