கரோனா தொற்று பரவல் காரணமாக பயணிகள் வருகை சரிந்துள்ளதை அடுத்து வேலூரில் இருந்து சென்னைக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் 15 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், உள்மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று 2-ஆவது அலையாக பரவி வருவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பேருந்துகளில் பயணிகள் இருக்கைகளில் அமா்ந்து செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கவும், நின்று செல்லக்கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் கோட்டத்துக்கு உள்பட்ட வேலூா் மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளிலும் பயணிகள் இருக்கைகள் அமா்ந்து செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதன்காரணமாக, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்குள் இயக்கப்படும் நகர, புகா் பேருந்துகள் காலை, மாலை நேரங்களில் மட்டும் கூடுதலாக தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு தேவைப்படும் இடங்களுக்கு மட்டும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதேசமயம், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வழக்கமாக நாளொன்றுக்கு 170 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பேருந்துகளுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக, வேலூரில் இருந்து சென்னைக்கு 15 பேருந்துகள் குறைத்து இயக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.