ஆற்காடு: காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் இருந்து வேலூர் நோக்கி அரசு பஸ் நேற்று வந்து கொண்டிருந்தது. இதில் டிரைவர், கண்டக்டர் மற்றும் 4 பயணிகள் மட்டுமே இருந்தனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே நந்தியாலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, அரசு பஸ்சின் வலதுபுற முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்குள்ள தடுப்புச்சுரை மோதிக்கொண்டு, எதிர்புறமாக சென்னை செல்லும் சாலையில் சுமார் 30 அடி தூரத்துக்கு தாறுமாறாக ஓடி நின்றது. 

அப்போது எதிர் திசையில் வாகனங்கள் வராததால், பெரும் அசம்பாவிதம் நடக்கவில்லை. மேலும் டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 4 பயணிகளும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. 

இதுகுறித்து ரத்தினகிரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.