ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தின் தலைமையகமாக அறிவிக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புக் குறிய ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்ற திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

தொகுதியின் சிறப்புகள்

இந்தியாவுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் தொகுதியாக ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி இருக்கிறது. முழுக்க முழுக்க தொழில் நகரம் என்றால் மிகப் பொருத்தமாக இருக்கும். மத்திய அரசின் மகாரத்னா அந்தஸ்து பெற்ற பெல் தொழிற்சாலை மற்றும் அதைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழிற்சாலைகள், நூற்றாண்டு புகழ் வாய்ந்த பாரி பீங்கான் தொழிற்சாலை, சாமே டிராக்டர் தொழிற்சாலை, சிப்காட், சிட்கோ மற்றும் சிறப்புப் பொருளாதார மணல் தொழிற்பேட்டை, தோல் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் தொகுதியாக இருக்கிறது.

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி இந்தத் தொகுதி அமைந்துள்ளதால் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

18-ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட ராணிப்பேட்டை நகரம் ஆங்கிலேயர்களின் முக்கிய படைப் பிரிவுகள் தங்கிய பகுதியாக இருந்துள்ளது. செஞ்சிக் கோட்டை மீது ஆற்காடு நவாப்புகள் நடத்திய படையெடுப்பில் ராஜா தேசிங்கு வீரமணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கின்போது தேசிங்கு ராஜாவின் மனைவி உடன்கட்டை ஏறினார். இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஆற்காடு நவாப் சதாத்துல்லா கான், ராணியின் நினைவாக ஆற்காட்டின் மறுகரையில் ராணிப்பேட்டை என்ற நகரை உருவாக்கினார் என்ற வரலாறும் உள்ளது.

 

இந்தியாவில் இரண்டாவது மற்றும் தென்னிந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து சென்னை ராயபுரத்தில் இருந்து வாலாஜா வரை 1856-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ரயில் போக்குவரத்து தொடங்கியது வரலாற்று நிகழ்வாக இருக்கிறது.இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், மகாத்மா காந்தி உயிரிழந்த 13 ஆவது நாளில் அவருக்கு சிலை எழுப்பப்பட்டது. இந்திய அளவில் இதுவே மகாத்மா காந்திக்கு எழுப்பப்பட்ட முதல் சிலையாகும்.

1866-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாக தொடங்கப்பட்ட வாலாஜாப்பேட்டை இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளது. மாநிலத்தில் மிகப்பெரிய நவ்லாக் தென்னைப் பண்ணை, புகழ் பெற்ற கால்நடை மருந்து ஆராய்ச்சி மையம், சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்கடர் மருத்துவமனை, கைலாய தரிசனத்துக்கு ஒப்பான ஷடாரண்ய ஷேத்திர சிவாலயங்கள், வாலாஜாப்பேட்டை ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம், காசி விஸ்வநாதர், திருப்பாற்கடல் பெருமாள் கோயில், வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோயில், படவேட்டம்மன் கோயில்,ரத்தினகிரி முருகன் கோயில், ராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை, மேல்விஷாரம் பகுதிகளில் பழமை வாய்ந்த மசூதிகள்,தேவாலயங்கள் உள்ளிட்டவை தொகுதியின் ஆன்மீக அடையாளங்களாக உள்ளன.

பகுதிகள்: வாலாஜாப்பேட்டை, ராணிப்பேட்டை மற்றும் மேல்விஷாரம் நகராட்சிகள், வாலாஜாப்பேட்டை ஒன்றியத்தில் 27 கிராம ஊராட்சிகள், ஆற்காடு ஒன்றியத்தில் 14 கிராம ஊராட்சிகள் மற்றும் அம்மூர் பேரூராட்சி ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

முக்கியத் தொழில்

ராணிப்பேட்டை தொழில் நகரம் என்பதால் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தோல் மற்றும் தொழிற்சாலை சார்ந்த பணிகளையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். மறுபுறம் விவசாயமும், கால்நடை வளர்ப்பும், கட்டிடத் தொழிலாளர்கள், பட்டு நெசவு, பிரம்புப் பொருள்கள் உற்பத்தி, பீடி சுற்றுதல், சரக்கு வாகனத் தொழில் மற்றும் கூலி வேலை முக்கியத் தொழிலாக உள்ளது.
 
1952-ம் ஆண்டு முதல் ஒரு இடைத்தேர்தல் மற்றும் 14 பொதுத் தேர்தல் என 15 தேர்தல்களை ராணிப்பேட்டை தொகுதி சந்தித்துள்ளது. இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் 3 முறை, திமுக 6, அதிமுக 3, சுயேட்சைகள் 3 முறை வெற்றி பெற்றுள்ளனர்.

இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்

1952 - கதிர் ஷெரிப் - காங்கிரஸ்
1957 - சந்திரசேகர நாயக்கர் - காங்கிரஸ்
1962 - அப்துல் கலீல் - திமுக
1967 - ஏ. ஜி. சாஹிப் - சுயேட்சை
1971 - கே. ஏ. வஹாப் - சுயேட்சை
1977 - துரைமுருகன் - திமுக
1980 - துரைமுருகன் - திமுக
1984 - எம்.கதிர்வேலு - காங்கிரஸ்
1989 - ஜெ. அசன் - சுயேட்சை
1991 - என். ஜி. வேணுகோபால் - அதிமுக
1996 - ஆர்.காந்தி - திமுக
2001 - எம்.எஸ்.சந்திரசேகரன் - அதிமுக
2006 - ஆர். காந்தி - திமுக
2011- அ. முகமது ஜன் - அதிமுக
2016 - ஆர்.காந்தி - திமுக

2016 - தேர்தல் நிலவரம்

ஆர். காந்தி (திமுக) 81,724 வாக்குகளுடன் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். சி. ஏழுமலை(அதிமுக) 73, 828 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இவர்களுக்கிடையேயான வாக்கு வித்தியாசம் - 7,896 வாக்குகள் ஆகும்.

வாக்காளர்கள் விவரம்

ஆண் வாக்காளர்கள் - 1,28,391, பெண் வாக்காளர்கள் - 1,37,219, மூன்றாம் பாலினத்தவர் - 16 என மொத்தம் 2,65,626 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்

தற்போது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, கடந்த 2019 சுதந்திர தின விழா உரையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவித்தார். தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி ராணிப்பேட்டை தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக புதிய மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் என ரூ. 118.40 கோடி செலவில் பெருந்திட்ட வளாகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் வாலாஜாப்பேட்டை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கல்லூரி மேம்பாட்டுக்கென சிறப்பு நிதியாக ரூ. 6 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கியது. இந்த நிதியில் சுமார் 30 புதிய வகுப்பறை கட்டும் பணிகளும், 4 புதிய ஆய்வுக கட்டடங்கள் கட்டும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் அ.முகமதுஜான் தனது உறுப்பினர் நிதியில் இருந்து முத்துகடை, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உயர்கோபுர மின் விளக்குள், சிமெண்ட் சாலை, பள்ளிக் கட்டங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தொகுதியில் அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளாக ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ஆர்.காந்தி, தமிழகத்தின் எதிர்கட்சியான திமுகவை சேர்ந்தவராக இருந்தாலும் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் தந்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து சரிசெய்துள்ளார்.

அரசு மற்றும் அரசு அங்கன்வாடி, ஆரம்பப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டடம், சுற்றுச் சுவர், கழிப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் தனது சொந்த செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை நகர மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய குறுகிய மேம்பாலம் இவரது தொடர் முயற்சியின் காரணமாக ரூ. 34 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

தொகுதிக்குள்பட்ட பல இடங்களில் பேருந்து புதிய நிறுத்தக் கட்டடம், உயர்கோபுர மின் விளக்குகள், மேல்நீர்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல ராணிப்பேட்டை புதிய மாவட்ட காவல் ஆட்சியர் ச. திவ்யதர்ஷினி, காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில் வாகனன் ஆகியோரின் முயற்சியால் சாலை மேம்பாட்டுப் பணிகள், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு, விபத்து தடுப்பு நடவடிக்கை மற்றும் குற்றச் செயல்கள் தடுக்கும் வகையில் ராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை, மேல்விஷாரம் ஆகிய முக்கிய நகரப் பகுதிகள், முக்கிய சாலை சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.    

தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள்

தமிழகத்திலேயே ஒரே நிறுவனமாக ராணிப்பேட்டையில் இயங்கிவரும் கால்நடை நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையத்தை கால்நடை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும். நிதிநிலை அறிக்கையில் பல முறை அறிவிக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்ட பிறகும் திண்டிவனம் - நகரி ரயில் திட்டத்தை கிடப்பில் போடப்பட்டுள்ளது. வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து ராணிப்பேட்டை வரை உள்ள இருப்புப்பாதை புதுப்பிக்கப்பட்ட பிறகும் ராணிப்பேட்டைக்கு பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.

சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேக்கி வைக்கப்பட்டுள்ள 2.27 லட்சம் மெட்ரிக் டன் குரோமியக் கழிவுகள் அகற்றப்பட வேண்டும். உப்புத்தன்மை அதிகமாகக் காணப்படும் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். மாசடைந்த நிலத்தை உயிரி வேதியியல் முறையில் மறு சீரமைப்பு செய்ய வேண்டும். விவசாயம் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் தோல் கழிவால் ஏற்பட்ட நிலத்தடி நீர் மாசு, பாலாற்றில் மணல் குவாரியைத் தடை செய்ய வேண்டும். வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு எதிரே உள்ள பழைய கட்டடத்துக்குச் செல்ல சுரங்கப்பாதை பணிகள் விரைந்து தொடங்க வேண்டும்.

ராணிப்பேட்டை பிஞ்சி ஏரி, தண்டலம் ஏரி, புளியந்தாங்கல் ஏரி, புளியங்கண்ணு ஏரி, வன்னி வேடு ஏரி உள்ளிட்ட நன்னீர் ஏரிகள் மற்றும் பாலாற்றில் நேரடியாக கலக்கும் கழிவுநீருக்கு முற்றுப்புள்ளி வைக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். இந்த தொகுதிக்குள்பட்ட தெங்கால் பகுதி பொன்னை ஆற்றிலும், பாலாற்றிலும் தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீரை உயர்த்தி குடிநீர், விவசாயத்திற்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

ராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை, மேல்விஷாரம் நகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டம், மின்தகன மேடை பணிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ராணிப்பேட்டை நகரில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைத்து, அனைத்து வழித்தட பேருந்துகளும் நகருக்குள் வந்து செல்ல வேண்டும். சிப்காட், சிட்கோ, சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகிய தொழிற்பேட்டைகளில் புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் பல்நோக்கு இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள், வேட்பாளர்கள்

திமுகவை பொருத்தவரை தற்போது ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் ஆர்.காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிக (குட்புக் லிஸ்டில்) நெருக்கமானவரகாவும், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் நட்பைப் பெற்றவரவும், திமுக மாவட்ட செயலாளர்களில் சீனியர் மாவட்டச் செயலாளராக உள்ளதாலும், கரோனா பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக அளவில் நல உதவிகள் செய்து கட்சி தலைமையின் பாராட்டைப் பெற்றவர் என்ற முறையிலும், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எந்த நேரத்திலும் சந்தித்து உதவிகள் கேட்கும் அளவுக்கு கொடுக்கும் குணம் கொண்டவராக மக்கள் மத்தியில் பெயரெடுத்துள்ள நாயுடு இனத்தைச் சேர்ந்தவரான ஆர்.காந்திக்கு தான் திமுகவில் சீட் என்றும், திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றால் அவர் அமைச்சர் என்றும் கட்சியினர் உறுதியாக தெரிவிக்கின்றனர்.

அதிமுகவை பொருத்தவரை கடந்த தேர்தலில் போட்டியிட்டு சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய வன்னியர் இனத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளரும், தற்போதைய எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளருமான சுமைதாங்கி சி.ஏழுமலை, இந்தத் தேர்தலில் மீண்டும் சீட் கேட்டு கட்சித் தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் தஞ்சமடைந்து, கடந்த தேர்தலில் தோல்வியை தழுவியர் என்ற அனுதாபமும், அதிமுக - பாமக கூட்டணியால், வன்னியர்களின் வாக்குகளில் இந்த முறை வெற்றி பெறுவேன் என கூறி காத்திருக்கிறார்.

அதேபோல் கடந்த காலங்களில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து தற்போது ராணிப்பேட்டை மாவட்ட அம்மா பேரவை பொருளாளரும், கட்டுமானம், கல் குவாரி தொழில் அதிபருமான எஸ்.எம்.சுகுமார் என்பவரும், ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு சீட் கேட்டு மாவட்டச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் சிபாரிசு பெற்று எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை என்ற ரீதியில் கட்சித் தலைமையிடம் சீட் பெற்று எம்எல்ஏ ஆக வேண்டும் என காய்களை நகர்த்தி வருகிறார்.

வெற்றியை நிர்ணயிக்கும் சமுதாய வாக்குகள்

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியைப் பொருத்தவரை வன்னிய சமூகத்தினர் பிரதானமாக உள்ள நிலையில், தாழ்த்தப்பட்டோர், முதலியார், நாயுடு, இஸ்லாமியர்கள் என அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இந்த நிலையில் வெற்றியை தீர்மானிப்பதில், முக்கிய பங்கு வன்னியர் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.