வேலூர்: இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த பட்டதாரி பெண்ைண குடியாத்தம் வாலிபர் திருமணம் செய்து கொண்டார். பாதுகாப்பு கேட்டு இருவரும் போலீசில் தஞ்சமடைந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் லதா (23) பி. சி. ஏ. பட்டதாரியான அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இரண்டாண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் லதாவுக்கு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் லதாைவ, மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு லதா, மணிகண்டனுடன் குடியாத்தத்தில் வசித்து வந்தார்.

லதா திடீரென மாயமானதால் அவரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைக் காணவில்லை. குடியாத்தத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை லதா திருமணம் செய்து கொண்ட தகவலை ஓரிரு நாட்களுக்கு முன்பு கேள்விப்பட்ட பெண் வீட்டாா் நேராகக் குடியாத்தம் வந்தனர்.

அவர்கள், லதாவை தங்களுடன் வருமாறு அழைத்தனர். ஆனால் அவர், மறுத்து விட்டார். பயந்துபோன காதல் ஜோடி இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது லதா தனது பெற்றோருடன் செல்ல மறுத்து, காதல் கணவர் மணிகண்டனுடன் செல்வதாகப் போலீசாரிடம் தெரிவித்தார். லதாவும், மணிகண்டனும் மேஜர் என்பதால் அவர்களின் திருமணத்துக்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது என்றும், இருவரும் திருமணம் செய்து கொண்டதால், அவர்களை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்றும் போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து லதாவின் பெற்றோர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.