அளவில் சிறியதாகவும், கசப்பாகவும் இருந்தாலும் சுண்டைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். பலர் இந்த சுண்டைக்காயை அலட்சியப்படுத்துவதுண்டு. ஆனால் சுண்டைக்காயில் இருக்கின்ற நுண்ணூட்டச் சத்துக்கள் பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும், நன்மைகள் பற்றித் தெரிந்துகொண்டால் யாரும் அதை ஒதுக்கமாட்டோம்.

சுண்டைக்காய் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது, ரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிவதைத் தவிர்க்கிறது, ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணம் உள்ளது. இது, வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, அதிகப்படியான இரும்புச் சத்து உள்ளது. இதனைத் தவறாமல் உண்ணும் உணவில் சேர்த்துக்கொண்டால், ரத்த சோகையை எதிர்த்துப் போரிட்டும், உடலுக்கு அதிக வலுசேர்க்கும்.

காயங்களையும், புண்களையும் விரையில் குணமடையச் செய்கிறது. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுத்து, பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும் உதவுகிறது. பிரசவமான பெண்களுக்குப் பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாகக் கொடுக்கப்படும் ‘அங்காயப் பொடியின்’ பிரதான பொருளாக இருப்பது சுண்டைக்காய்தான்.

குழந்தையை ஈன்றெடுத்த தாய்மார்களுக்கு சுண்டைக்காய் மிகவும் நல்லது. இது, தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றுகிறது. அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால், அவ்வப்போது நம் உடலில் தங்கும் நசுக்கி கிருமிகளுக்கு யமனாகச் செயல்படுகிறது.

சுண்டைக்காயை நன்கு உலர்த்தி அதனைப் பொடியாக்கி தினமும் சிறிதளவு தண்ணீரில் அந்த பௌடரை கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய்த் தொற்றும், அதன் விளைவாக உண்டாகிற அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

சுண்டைக்காயைக் காய வைத்து, வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு, வறுத்து சூடான சாதத்தில், பொடித்துச் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும். மேலும், வாயுப் பிடிப்பு பிரச்சனைக்கான சிறந்த மருந்து இந்த சுண்டைக்காய்.

பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொண்டால் எலும்புகள் பலமாகும். உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட சுண்டைக்காயை நாம் அனைவரும் உணவில் பயன்படுத்துவோம்.