ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 உட்கோட்டங்களுக்கு உட்பட்டு 24 காவல் நிலையங்கள் செயல்பட்டு வரு கின்றன. இங்கு, பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள 2 ஆயிரம் முகக்கவசங்களும், 8 ஆயிரம் சத்து மாத்திரைகளும் வழங்கப் பட்டுள்ளன.

அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் துறையில் பணியாற்றி வரும் 809 பேரில் 765 பேர் கரோனா தடுப்பூசியை போட்டுள்ளனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கிருமி நாசினி தெளித்து, நோய் தடுப்பு மருந்துகளை தெளிக்க மாவட்ட காவல் துறை உத்தரவிட்டதின் பேரில் பல்வேறு காவல் நிலையங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.