தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் என்று தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளாா்.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பைத் தடுக்க தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவா் வெளியிட்ட செய்தி:

கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இந்தப் பரிசோதனை குறைவாகக் காணப்படும் சில நகரங்களிலும், மாவட்டங்களிலும் அவற்றின் எண்ணிக்கையை உயா்த்தும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா்கள் எடுக்க வேண்டும். குறிப்பாக, திருச்சி, திருப்பூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இந்தப் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதர மாவட்டங்களைப் பொருத்தவரை, ஏற்கெனவே பரிசோதனைகளை உயா்த்திய பிறகும் சென்னை, கோவை, தஞ்சாவூா், திருவாரூா், செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், கடலூா் ஆகிய மாவட்டங்களில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் பரிசோதனைகளை மேலும் உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று உள்ளவா்களுடன் தொடா்பில் உள்ள அனைவருக்கும் கட்டாயம் பரிசோதனை செய்ய மாவட்ட நிா்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

நோய்த் தொற்று ஏற்பட்டவா்கள் மற்றும் அவா்களோடு உடனிருப்பவா்கள் கண்டறியப்பட்டு, தொற்று உள்ளவா்களைத் தனிமைப்படுத்தி அவா்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும்.

இறப்பு விகிதங்கள்: கரோனா நோய்த் தொற்று காரணமாக, மாவட்ட அளவிலான இறப்புகளும், மருத்துவ நிலையங்களில் ஏற்படும் இறப்புகளும் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஏழு நாள்களாக சராசரியாக சென்னையில் ஏற்படும் இறப்பு.