புத்தாண்டு இரவான நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் காவல்துறையினர் தீவீரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன் படி வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பொதுமக்கள் அதிமாகக்கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்புப் பணிக்காகச் சீருடையிலும், மஃப்டியிலும் கூடுதலான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பொது இடங்களில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, ஒலிபெருக்கி வைக்கக்கூடாது. மாவட்டத்தில் டோல்கேட், சோதனைச் சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட முக்கிய இடங்களில் வாகனத் தணிக்கை செய்யப்படும்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். அதிவேகமாகவும், பைக் ரேஸில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்வதுடன், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
பைக் ரேஸைத் தடுக்க வேலூர் மாவட்டத்தில் 58 இடங்களில் தடுப்புகளை வைத்துக் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடவிருக்கிறார்கள். ரேஸில் பிடிபடும் நபர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டால், அந்த நபர்கள் வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் மற்றும் வேலைவாய்ப்புப் பெற காவல்துறை மூலமாக நன்னடத்தை சான்றிதழ் பெற இயலாது. எனவே, காவல்துறையினரின் அறிவுரைகளைக் கடைப்பிடித்து பொதுமக்கள் பாதுகாப்பாகப் புத்தாண்டை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்’’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.