பாணாவரம் அருகே தொடக்கப்பள்ளி வளாகத்தை பாராக மாற்றிய சமூக விரோதிகளால் பொதுமக்கள் அதிர்ச்சிய டைந்தனர். 
பாணாவரம் அருகே உள்ளது காட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி . இப்பள்ளியில் 140 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் . இந்நிலையில் , கொரோனா வைரஸ் பரவலை தடுக்க , கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது 10 , 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது . தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் , சீருடை , உலர் உணவுப்பொருட்கள் வழங்கல் , மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் அவ்வப்போது நடந்து வருகிறது. 

இந்நிலையில் , காட்டுப்பாக்கம் தொடக்கப் பள்ளியில் கடந்த 26 ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடினர் . அப்போது பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் காலி மதுபாட்டில்கள் , பிளாஸ்டிக்டம்ளர்கள் , குடிநீர் பாட்டில்கள் , தின்பண்டகழிவுகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக்கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் , மாணவர்கள் ,  ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . அப்போது பள்ளி தூய்மைப்பணியாளர்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்த காலி மது பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை அவசரகதியில் அப்புறப்படுத்தினர்.

இது குறித்து பொது மக்கள் கூறுகையில் , சமூகவிரோதிகள் சிலர் பள்ளிக்கூடங்களை குடிக்கும் இடமாக மாற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இதனால் பள்ளிக்கூடங்களின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதுடன் , எதிர்கால மாணவசமூகம் உருவாகும் இடத்தில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது.

எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் , பள்ளிகளை மது அருந்தும் கூடமாக மாற்றிவரும் சமூக விரோதிகளை இனம் கண்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் .