வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று வள்ளி மலை கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களிலிருந்து பசுமாடுகளை குளிப்பாட்டி வர்ணங்கள் பூசி பலூன் கட்டி   கோவிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். இவ்வாறு தரிசனம் செய்யும்பொழுது  கால்நடைகள் நோய்நொடியின்றி ஆரோக்கியத்துடன் இருக்கும் என்றும் விவசாயம் செழிக்கும் என்ற ஐதிகம் இந்தப் பகுதி மக்களிடையே அதிகமாக உள்ளது.


அதன்படி மாட்டுப்பொங்கல் ஆன நேற்று மாலை 6 மணி முதலே பசுமாடுகளை  கோவிலுக்கு அழைத்து வந்து முருகனை தரிசனம் செய்தனர். சுமார் நூற்றுக்கும் அதிகமான பசுமாடுகள் அழைத்து வரப்பட்டு மாட்டுப் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடினர்.