வேலூர்: வேலூரில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்தது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். 


வேலூர் தோட்டப்பாளையம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த கம்பி கட்டும் கூலித் தொழிலாளியான வேலு கடந்த மாதம் நாலாம் தேதி காணாமல் போயுள்ளதாக வடக்கு காவல் நிலையத்தில் அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 11ம் தேதி வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சுடுகாட்டில் எரியூட்டும் தகன மேடைக்கு அருகே சடலமாக மீட்கப்பட்டார். உடலில் காயங்கள் இருந்ததால் போலீசார் கொலையாக இருக்கலாம் என சந்தேகத்தின் பெயரில் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகன், அலெக்ஸ், மணிகண்டன், 17 வயது சிறுவன், பாலகிருஷ்ணன் என 5 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் புதிய பேருந்து நிலையம் அருகே அழைத்துச் சென்று மது அருந்தும் போது அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். கொலைக்கான காரணமாக வேலு அந்த பகுதியில் உள்ள பெண்களிடம் ஆபாசமாக பேசுவது மதுபோதையில் கண்ணாடிகளை உடைப்பது போன்ற அடாவடி செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கடந்த மாதம் சைதாப்பேட்டை கழிவுநீர் கால்வாயில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவரை இவர்தான் கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்ததாலும் அடித்து, கத்தியால் குத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 

ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு சிறையில் அடைத்துள்ளனர்.