வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகள் திடீரென முடங்கின. இதன்காரணமாக யூடியூப், ஜிமெயில், பிளேஸ்டோர் உள்ளிட்டவை செயல்படாமல் போயின. பிறகு சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு நிலைமை சரியானது.
இன்று பிற்பகலுக்கு மேல் அவ்வப்போது யூடியூப் வீடியோ தளம் வீடியோ இயங்க முடியாமல் போனது. சற்று நேரத்தில் சிலருக்கு அது சரியானது. ஆனால் சிலருக்கு அது சரியாகவில்லை.
இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பயனாளர்கள் கருத்துக்களை பகிரத் தொடங்கினர். செல்போனில் மட்டுமல்லாது கணினியிலும் கூட கூகுளின் செயல்பாடுகள் தடைபட்டன.
உலகம் முழுவதுமே இந்த நிலை இருப்பதாக கூறப்பட்டது. உடனடியாக இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
கூகுள் நிறுவனம் சமீபகாலமாக தங்களது நிறுவனத்தை மேம்படுத்தி வருகிறது. அவ்வாறான பணிகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் இந்த பிரச்சனைக்கு காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ஜி மெயிலுக்குள் செல்ல முற்பட்டபோது, "We're sorry, but your account is temporarily unavailable. We apologize for the inconvenience and suggest trying again in a few minutes." என்ற வரிகள் வந்தன.
யூடியூப்புக்குள் செல்ல முற்படும்போது, "Something went wrong..." என்று மெசேஜ் வந்தது.
மண்டலவாரியாக பார்த்தால், ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவுக்கான பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதேநேரம், Google.com இயங்கிக் கொண்டிருந்தது. அதாவது Search Engineல் பிரச்சினை இல்லாமல்தான் இருந்தது.
அதேநேரம், 20 நிமிடங்களுக்கு பிறகு, கூகுள் சேவை மறுபடியும் திரும்பியது. இதன்பிறகுதான் இணையதள சேவை பயனாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்