வேலூர் : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார் . 

அதன்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கு அரசாணைகளின்படி , 1 ) வட்டாட்சியர் அளவில் வழங்கப்படும் குடும்ப குடிபெயர்ச்சி சான்றிதழ் , 2 ) வட்டாட்சியர் அளவில் வழங்கப்படும் இருப்பிடசான்றிதழ் , 3 ) குடும்ப அடையாள அட்டை ( அல்லது ) ஆதார் அட்டை ( அல்லது ) நிலையான கணக்கு அட்டை ( அல்லது ) வாக்காளர் அட்டை ( அல்லது ) கடவுச் சீட்டு ( அல்லது ) ஓட்டுநர் உரிமம் ( அல்லது ) முன்னாள் படைவீரர்களுக்கான அடையாள அட்டை ( அல்லது ) மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை , இவைகளில் ஏதாவது ஒன்றினை கட்டாயம் சமர்ப்பிக்கவேண்டும் என்ற நடைமுறை அமுலில் இருந்து வருகிறது . 

மேற்படி , நடைமுறையில் எளிமைப்படுத்துமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை , இயக்குநர் அவர்களால் அரசுக்கு அனுப்பப்பட்ட கருத்துரு ஏற்றுக்கொள்ளப்பட்டு மனுதாரர்களால் சுய சான்றளிக்கப்பட்ட குடும்ப அடையாள அட்டை ( அல்லது ) ஆதார் அட்டை ( அல்லது ) வாக்காளர் அட்டை ( அல்லது ) கடவுச் சீட்டு ( அல்லது ) ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை மட்டும் சமர்ப்பித்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .