பாணாவரம்: பாணாவரம் அரசு மருத்துவமனையில், கடந்த 1 மாதமாக எக்ஸ்ரே பிலிம் தட்டுப்பாட்டால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தில், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 

இந்நிலையில், எலும்பு மற்றும் காசநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு, சிகிச்சை எடுத்துக்கொள்ள வரும் நோயாளிகளுக்கு சளி பரிசோதனை, எக்ஸ்ரே படம் எடுக்க டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வாறு எக்ஸ்ரே எடுக்க செல்லும் நோயாளிகளுக்கு பிலிம் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி எக்ஸ்ரே எடுக்காமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இதனால் பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து வரும் முதியவர்கள், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட நோயாளிகள் குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். 

கடந்த ஒரு மாதமாக இம்மருத்துவமனையில் எக்ஸ்ரே பிலிம் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் எக்ஸ்ரே பிலிம்கள் கொள்முதல் செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என நோயாளிகள் புலம்புகின்றனர். 

மழைக்காலத்தில் தொற்றுநோய்கள் தாக்கமும், பருவகால மாற்றத்தில் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதால் குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடிவதில்லை. மேலும் எக்ஸ்ரே பிலிம் இல்லாததால், நோயாளிகள் இங்கு தினமும் அலைக்கழிக்கப்பட்டு, கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளிகள் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக எக்ஸ்ரே பிலிம்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.