ராணிப்பேட்டை மாவட்டத்தை ஆன்மிக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரத்திற்கு அடுத்தப்படியாக விண்ணளவிய கோபுரங்களும் ஆலயங்களும் தன்னகத்தே கொண்டது ராணிப்பேட்டை மாவட்டம். புதியதாக தொடங்கப்பட்ட இந்த மாவட்டத்தில் தொழிற்சாலைகளும், விவசாயமும் போதுமான அளவிற்கு உள்ளது. காஞ்சிபுரத்திற்கு மிக அருகாமையில் உள்ளதால் ஆன்மிக சுற்றுலா செல்பவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புண்ணிய தலங்களை தரிசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்த மாவட்டத்தில் உள்ள தக்கோலம் பல வரலாற்று சிறப்புகளை கொண்டது. வாதாபி கொண்டான் இரண்டாம் புலிகேசி போர் புரிந்த ஊர். கல்கியின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் இந்த ஊரின் பெருமைகளை எடுத்துரைத்துள்ளார். இங்குள்ள ஜலநாதீஸ்வரர் கோயிலில் உள்ள அற்புதமான தட்சிணாமூர்த்தியும் அந்த கோயிலும் தரிசிக்க வேண்டிய திருத்தலம்.

பனப்பாக்கத்தில் உள்ள மயூரநாதீஸ்வரர் கோயில், நெமிலி பாலா திரிபுரசுந்தரி அம்மன், காவேரிப்பாக்கத்தில் உள்ள பஞ்சலிங்க தலங்களான கொங்கினீஸ்வரர், முக்தீஸ்வரர், பஞ்சநாதீஸ்வரர், வாலீஸ்வரர், கரபுரீஸ்வரர் ஆகியவை பல ஆன்மிக சம்பவங்களை கொண்டதாகும்.

திருப்பாற்கடலில் உள்ள அரியும், சிவனும் ஒன்றாக காட்சியளிக்கும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் அதன் அருகே உள்ள ரங்கநாத பெருமாள் ஆகிய வைணவ தலங்களும் வாலாஜாவில் உள்ள காசிவிஸ்வநாதர், ஏகாம்பரநாதர் வாலாஜா அடுத்த கோவிந்தசேரி குப்பத்தில் உள்ள ஞானமலை சுப்ரமணிய சுவாமி உள்ளிட்டவைகள் பல பெருமைகள் கொண்டதாகும். 108 வைணவ தலங்களில் முக்கியமானதும் நரசிம்ம அவதாரத்தை விளக்கிடும் லட்சுமி நரசிம்மரும், யோக ஆஞ்சநேயரும் குடிகொண்டிருக்கும் சோளிங்கர் ஆன்மிகவாதிகள் தரிசிக்க வேண்டிய அற்புத தலமாகும். வாலாஜாவில் உள்ள நோய் தீர்க்கும் மருத்துவ கடவுளான தன்வந்திரி பெருமாள், வாலாஜா மற்றும் ஆற்காடு பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஷடாரண்ய தலங்கள் தரிசிப்பதற்கு பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராணிப்பேட்டை அடுத்த நவல்பூரில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயில், கலவையில் உள்ள அங்காளபரமேஸ்வரி, கமலக்கன்னி, கலிவரதன், காரீசன், கமல விநாயகர், காஞ்சி சங்கராச்சாரியார் சமாதி ஆகியவற்றை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வெளியூரிலிருந்து வந்து செல்கிறார்கள். திமிரியில் உள்ள குமரகிரி மற்றும் ரத்தினகிரியில் உள்ள புகழ்பெற்ற பாலமுருகன் திருக்கோயில் இவையெல்லாம் பக்தர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றதாகும். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து சுற்றுலா வரை படத்தில் இடம்பெற வேண்டும் என பக்தர்களின் கோரிக்கையாகும்.