செஞ்சி போரில் வீரமாக போரிட்டு மடிந்த ராஜா தேசிங்குக்கும் அவருடன் உடன் கட்டை ஏறிய அவரின் மனைவி ராணி பாய்க்காக ஆற்காடு நவாப் சதத்துல்லா கானால் கட்டப்பட்ட நினைவு மண்டபம் என கூறப்படுகின்றன இவ்விரு மண்டபங்களும். ராணிப்பேட்டை நகரில், பாலாற்றின் கரையில் இவை அமைந்துள்ளன. 

கற்களால் பலகோண வடிவில் அமைக்கப்பட்டு, மேல் விமானம் செங்கற்களினால் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மண்டபத்தினுள் பிருந்தாவனம் ஒன்றும், மற்றொன்றில் சிதிலமடைந்த பீடமும் காட்சியளிக்கின்றன. புதர்களின் மத்தியில் அணுக கடினமாக இருந்த இந்த வரலாற்று சின்னங்கள், இப்பொழுது காண இலகுவாக சுற்றுப்புறம் தூய்மைப் படுத்தப்பட்டுள்ளன. 

ராணி பாயின் நினைவாகவே இவ்வூர் ராணிப்பேட்டை எனஅழைக்கப்படுகிறது. எதிரியே வியந்த வீரம் மற்றும் அன்பின் சின்னங்களாக இவை விளங்க வரலாற்று சான்றுகள் துணை நிற்கட்டும்.