ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஏரி தமிழகத்தில் உள்ள பெரிய ஏரிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது .மேலும் இது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரி என்ற பெருமையுடன் காட்சியளிக்கிறது . 

நாலாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி நிவர் மற்றும் புரெவி புயலினால் பெய்த தொடர் மழையின் காரணமாகவும் பாலாற்றின் வரும் தண்ணீரினால் வேகமாக நிரம்பி வந்த நிலையில் அதன் முழு கொள்ளளவை ( 30.5 அடி ) எட்டும் முன்பே ஏரியிலிருந்து உபரி நீர் கடந்த வாரம் திறந்து விடப்பட்டது . இந்த நிலையில் 29 அடி கொள்ளளவுடன் கடல் போல் காட்சியளிக்கின்றது.மேலும் இந்த ஏரியில் இருந்து 44 கிளை ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது . 

இந்நிலையில் மதகு திறந்தும் தண்ணீர் வராததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . ஆலப்பாக்கம் , கர்னாவூர் , புதுப்பட்டு , துரைபெரும்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு செல்லும் கால்வாயின் மதகு இன்று திறக்கப்பட்டது . ஆனாலும் அடைப்பின் காரணமாக தண்ணீர் கால்வாய்க்கு செல்லவில்லை . 

எனவே மெத்தனமாக இருக்கும் பொதுப்பணித்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.