திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வெங்கிளி கிராமத்தில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை மாதனூர் தேவிகாபுரம் பகுதியை சேர்ந்த ராகவேந்திரன் (வயது 48) என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார்.

இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான 170 கிலோ எடை கொண்ட பஞ்சலோக கருமாரி அம்மன் சிலையை பாதுகாப்பு கருதி இவர் தன்னுடைய வீட்டில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். மேலும் முக்கிய விசேஷ நாட்களில் பூஜை செய்வதற்கு மட்டும் அந்த சிலையை கோவிலுக்கு எடுத்து சென்று பின்னர் வீட்டில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிகொண்டு குடியாத்தம் பரதராமி பகுதியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்றுமுன்தினம் மாலை வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பஞ்சலோக அம்மன் சிலை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. மேலும், சிலை வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த பூஜை பொருட்கள், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் உள்ளிட்டவையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் ராகவேந்திரன் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.