‘மாதங்களில் நான் மார்கழி” என்று கூறினார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. கடவுளே தம்முடையதாகப் பெருமிதப்படுகிற மாதம் இந்த மாதம்.
மிருகசீர்‌ஷ நட்சத்திரம் சந்திரனுடன் சேர்வதால் மார்கசீர்‌ஷம் என்றும் (மார்கசீர்‌ஷம் என்பதே மிருகசீர்‌ஷம் என்றழைக்கப்படுகிறது; இதுவே மார்கழி என்றும் சுருங்கிவிட்டது), சூரியன் தனுசு ராசியில் இணைவதால் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிற இம்மாதத்தில்தான் சிவபெருமானுக்கு உரித்தான ஆருத்ரா தரிசனப் பண்டிகையும் (திருவாதிரைத் திருநாள்) திருமாலுக்கு உரித்தான வைகுண்ட ஏகாதசியும் வருகின்றன. தவிரவும், குருசேத்ரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் வைகுண்ட ஏகாதசியன்றுதான் கீதோபதேசம் செய்தார். ஆகவே, இதே நாள், கீதா ஜயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது.


மும்மூர்த்திகளின் ஒட்டுமொத்தமாகக் கருதப்படுகிற தத்தாத்ரேயர் அவதாரம் செய்த தத்தாத்ரேய ஜயந்தியும், பார்வதி தேவி அன்னபூரணியாகத் திருவதாரம் செய்த அன்னபூரணி ஜயந்தியும் இம்மாதத்திலேயே வருகின்றன. இந்த மாதத்தில்தான், ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடந்ததாக வடநாட்டவர்கள் நம்புகிறார்கள். துளசிதாசர் தம்முடைய ராம சரித மானசத்திலும் இப்படியே பாடுகிறார். ஆகவே, விவாக பஞ்சமியும் மார்கழி மாதத்திலேயே கொண்டாடப்படுகிறது.

இது ‘பீத மாதம்’! ‘பீத’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு ‘மஞ்சள்’ என்று பொருள். பீதாம்பரம் (பீத + அம்பரம்) என்றால் மஞ்சள் வண்ண ஆடை என்றும் பொருள். மார்கழியில், அதுவரைக்கும் இருந்த இருளும் மழையும் விட்டுப்போய், குளிர் வந்துவிடும். இருந்தாலும், அடுத்து வரஇருக்கிற உத்தராயணத்தின் காரணமாக, செடிகொடிகளில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். குறிப்பாக, மஞ்சள் வண்ணப் பூக்களைத் தரும் தாவரங்கள் அதிகமாகப் பூக்கும். இதனால், சுற்றிலும் பார்க்கும்போது, மஞ்சள் வண்ணம் பிரதானமாகக் கண்ணில் படும். இதை வைத்துக் கொண்டு நம்முடைய முன்னோர்கள், இந்த மாதத்தைப் ‘பீத மாதம்’ என்று விவரித்தார்கள். இதுவே காலப்போக்கில் மருவி, ‘பீடை மாதம்’ என்றாகிவிட்டது.

அது சரி, அப்படியென்றால், கல்யாணம் போன்றவை மார்கழி மாதத்தில் வேண்டாமென்று ஏன் சொன்னார்கள்? அதற்கும் முக்கியமான காரணங்கள் உள்ளன. மழை, இருள் போன்ற அகன்று, அடுத்து வரஇருக்கும் தை மாதத்தில் அறுவடைப் பணிகள் தொடங்கவேண்டும்.

எந்தப் பணியாக இருந்தாலும் அதைத் தொடங்குவதற்கு முன்னர் கடவுளை வணங்குவது நம்முடைய மரபு. அதுவும் வயிற்றுக்குச் சோறிடும் அறுவடைப் பணிகளுக்கு முன்னதாக தெய்வத்தைத் தொழாதிருக்கலாமா? அது மட்டுமில்லை, அறுவடை முடிந்தால்தான் கையில் பணம் கிடைக்கும். அப்போதுதான் திருமணம், கிரஹப்பிரவேசம் போன்றவற்றை நடத்தமுடியும். இன்னொரு சூட்சுமமும் உண்டு. அந்தக் காலத்தில் கிராமத்து வாழ்க்கை. ஒரு வீட்டில் கல்யாணம் என்றால், மொத்த கிராமமும் அதில் பங்கெடுக்கும்.

கிராமம் முழுக்கத் திருமண வீட்டில் குவிந்துவிட்டால், ஊர்ப் பொதுவையும் கோயில் வேலைகளையும் யார் கவனிப்பார்கள்? இவை எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டனர் நம்முடைய பெரியவர்கள். சூழல், வருமானம், கோயில் காரியம் என்று எல்லாவற்றுக்கும் வசதியாக மார்கழி மாதத்தைக் கடவுள் வழிபாட்டு மாதமாக மாற்றிவிட்டனர். மொத்தம் பனிரெண்டு மாதங்களில், ஒரு மாதம் முழுமையும் ஆண்டவனுக்கு என்று அமைத்தனர்; இதனால், மீதமிருக்கும் பதினொரு மாதங்களும் சரியாக இருக்கும் என்பது மட்டுமில்லை, கடவுளுக்கான மாதத்தில் தனிப்பட்ட சுயநலங்களும் அவரவர் வீட்டு விசே‌ஷங்களும் இல்லாமல், வழிபாடுஆலயம்பொது நன்மை என்று மட்டுமே கவனமும் இருக்கும்.

மார்கழி மாதம் என்பது பிரம்ம முகூர்த்த மாதமும் ஆகும். அதென்ன பிரம்ம முகூர்த்தம்? ஒவ்வொரு நாளும், சூர்யோதயத்திற்கு முன்னதாக இருக்கும் 96 நிமிடங்கள், பிரம்ம முகூர்த்த காலமாகும். இந்த நேரத்தில் எந்தச் செயலைச் செய்வதற்கும் ‘நல்ல காலம்’ பார்க்கவேண்டியதில்லை.

மார்கழி எப்படி பிரம்ம முகூர்த்த காலமாகும்? நம்முடைய (அதாவது மனிதர்களுடைய) ஓராண்டுக் காலம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுதாகும்; தை முதல் ஆனி வரையிலான உத்தராயண ஆறு மாதங்கள், அவர்களுக்குப் பகல் பொழுது; ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சணாயண ஆறு மாதங்கள், அவர்களுக்கு இரவுப் பொழுது. இந்தக் கணக்குப்படி, தேவ பகல் தொடங்குவதற்கு முன்னதான மார்கழி, தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் ஆகும். இந்தச் சுப வேளையில், தேவர்களும் முனிவர்களும்கூட, இறைவனை வழிபடுகிறார்கள்.

ஆயர்பாடியின் பெண்கள், கிருஷ்ணனே தங்களுக்கு மணாளனாகக் கிடைக்கவேண்டும் என்பதற்காகக் காத்யாயனி தேவியை வழிபட்டு நோன்பு நோற்றார்கள்; இந்தக் காத்யாயனி நோன்பை மார்கழியில்தான் நோற்றார்களாம். பழந்தமிழ் நூலான பரிபாடல், மார்கழி மாதத்தில் கன்னியர்கள், அம்பா ஆடல் ஆடினர் என்கிறது. காத்யாயனி நோன்பையும் அம்பா ஆடலையும் அடிப்படையாகக் கொண்ட ஆண்டாள் நாச்சியாரும் மாணிக்கவாசகப் பெருமானும், திருப்பாவை திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிக் கொடுத்தனர்.

பரிபாடல், இன்னொரு செய்தியையும் தெரிவிக்கிறது. மார்கழியில், அந்தணர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள் என்பதே அந்தச் செய்தி. அறுவடைக்குப் பின்னர், வயல்வெளிகளில் வேலைகள் கூடும்; சமுதாய வாழ்க்கை முழு வேகமெடுக்கும். வேதங்களும் துதிகளும் ஓதக்கூடிய அந்தணர்கள், இப்படிப்பட்ட முழு வேகச் சமுதாய வாழ்க்கை நன்றாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும், ஆண்டு முழுவதும் முறையாக அமையவேண்டும் என்பதற்காகவும் மார்கழியில் பிரார்த்தனை செய்தார்கள்.மார்கழி மாதப் பண்டிகைகளில் வெகு சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி. மார்கழி மாத வளர்பிறையில் வரும் இதற்கு மோட்சதா (மோட்சம் தருவது) ஏகாதசி, முக்தி ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு.

வைகுண்ட ஏகாதசியன்று, அதிகாலையில், திருமால் திருக்கோயில்களில், வைகுண்ட வாசல் திறப்பு வெகு கோலாகலமாக நடைபெறும்.

திருமால் ஆலயங்களில், உள் பிராகாரத்திலிருந்து வெளிப் பிராகாரத்திற்குத் திறக்கும்படியாக, வடக்குப் புறத்தில் ஒரு வாசல் இருக்கும். ஆண்டு முழுவதும், இவ்வாசலின் இரண்டு கதவுகளும் மூடியிருக்கும். ஆனால், வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இந்த இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டு, பெருமாள் இந்த வாசல் வழியாக எழுந்தருள்வார். இந்தத் திருக்காட்சியைக் காண்பதற்காக பக்தர்கள், இந்த வாசலின் கதவுகளுக்கு எதிரே காத்திருப்பார்கள். பக்தர்களில் சிலர், பெருமாள் எழுந்தருளும்போது, தாங்களும் கூடவே இந்த வாசல் வழியாக வருவார்கள். இன்னும் சிலர், நாள் முழுவதும் வைகுண்ட வாசல் வழியாக வந்து, ஏற்கெனவே இவ்வாசல் வழியாக எழுந்தருளி, மண்டபத்திலோ அலங்கார மேடையிலோ கொலுவிருக்கும் பெருமாளைச் சேவிப்பார்கள்.

ஆண்டு முழுவதும் திறக்காமல், அன்று மட்டும் திறக்கிற வைகுண்ட வாசலுக்கு என்ன தனிச் சிறப்பு?

ஒருமுறை. பிரளயம் முடிந்த நேரம். சிருஷ்டிக்காக பிரம்மாவைத் தமது நாபிக் கமலத்திலிருந்து வரச் செய்தார் திருமால். சிருஷ்டியைத் தொடங்கிய பிரம்மாவுக்கோ தன்னைப் பற்றி ஏக கர்வம். கர்வத்தை அடக்குவதற்காகத் தம்முடைய காதுப் பகுதியிலிருந்து லோகன், கண்டகன் என்னும் அசுரர்கள் இருவரைப் பெருமாள் வரவழைத்தார்.

அசுரர்கள் இருவரும் பிரம்மாவை மிரளச் செய்தனர்; அவரின் கர்வமும் அடங்கியது. நன்மை செய்வதற்கு உதவிய அசுரர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று திருமால் வினவ, அவர்களோ அவர் தங்களோடு சண்டையிடவேண்டும் என்னும் வினோத வரத்தைக் கோரினர். சண்டையின் முடிவில் நற்கதியையும் யாசித்தனர். இதன்படி அசுரர்கள் இருவரோடும் பெருமாள் போரிட்டார்.

போரின் முடிவில், வடக்கு வாசல் வழியாக அவர்களைப் பரமபதத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு தம்முடைய திவ்ய தரிசனத்தையும் தந்தார். இவ்வாறு வடக்கு வாசல் வழியாக அசுரர்கள் பரமபதம் அடைந்த நாள் வைகுண்ட ஏகாதசி நாள். தாங்கள் பெற்ற பேறு எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்னும் நல்லாசையில், ‘மார்கழி வளர்பிறை ஏகாதசியில் பூலோகத்துப் பெருமாள் கோயில்களின் வடக்கு வாசலில் நுழைபவர் யாராயினும், அவர்களுக்குப் பரமபதப் பேற்றினை அளித்து அவர்களைத் தம்முடைய திருவடியில் திருமால் சேர்த்துக் கொள்ளவேணும்’ என்று வேண்டினர்.

இவ்வேண்டுகோளை நிறைவேற்றும் வகையிலும், இந்நிகழ்ச்ச்சியை நினைவுகூரும் விதத்திலும், திருமால் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறுகிறது. பரமபதமான வைகுண்டப் பேற்றினைத் தரக்கூடியது என்பதாலேயே வடக்கு வாசலுக்கு வைகுண்ட வாசல், வைகுண்ட துவாரம், சொர்க்க வாசல், திருவாசல், பரமபத வாசல் போன்ற பெயர்கள் நிலவுகின்றன.

ஆருத்ரா தரிசனம் என்னும் திருவாதிரைத் திருவிழாவும் மார்கழியின் சிறப்புகளில் ஒன்று. சிவபெருமானின் நட்சத்திரம் என்று பெருமை பெறுகிற திருவாதிரையில், நடராஜப் பெருமானின் நடனக் காட்சியைக் காண்பதே ஆருத்ரா தரிசனமாகும். சிவன் கோவில்களில், இந்த நாளில் ஏக கொண்டாட்டம்.

27 நட்சத்திரங்களில், இரண்டுக்கு மட்டுமே ‘திரு’ என்னும் அடைமொழி உண்டு திருமாலின் நட்சத்திரமான திருவோணம் (திரு+ஓணம்); சிவனின் நட்சத்திரமான திருவாதிரை(திரு+ ஆதிரை). ஆருத்ரா என்றால் நீருடைய, நீர்த்தன்மை மிக்க, ஈரமான என்று பொருள் சொல்லலாம். ஆ+திரை என்றால் நீர்த்துளி என்றே பொருள்.

கடவுள் கருணையின் ஈரம் கொண்டவர் என்பதே இதன் உட்பொருள். ஓரியன் விண்கூட்டத்தில், பெட்டல்ஜூஸ், ஆல்ஃபா ஓரியானிஸ் என்னும் விஞ்ஞானப் பெயர்களோடு காணப்படுகிற ஆதிரை நட்சத்திரம், சூரியனைப் போல் 30 மடங்கு அளவில் பெரியது; செந்நிறம் கொண்டது. உலக நாகரிகங்கள் அனைத்திலும் இந்த நட்சத்திரம் சிறப்பாகப் போற்றப்படுகிறது. அராபியர்களுக்கு பைத்அல்ஜைஸா, சீனர்களுக்கு ஷீன் ஸியுக்ஸி, மத்திய அமெரிக்கர்களுக்குச் சக் டுலிக்ஸ் என்று இதன் பெருமைகள் அபாரம். அமெரிக்காவின் பழங்குடியினர் இதனை அனவரூ (ஆதாரத்தம்பம்) என்று அழைக்கிறார்கள். பண்டைய ரோமாரியர்களைப் பொறுத்தவரை, இறப்புக்கும் மறுபிறவிக்குமான நட்சத்திரம் இது.

ஆதிரை நட்சத்திரம் மட்டுமல்ல, ஆதிரையானான சிவனாரும் செந்நிறத்தவர்தாம்! செம்பொற் சோதி என்றே இவர் போற்றப்படுகிறார். மார்கழி மாத முழு நிலா, மிருக சீர்‌ஷம் மற்றும் அதன் அடுத்த நட்சத்திரமான திருவாதிரை ஆகியவற்றோடு சேரும். இந்த நாளில், வியாக்ரபாத முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் நடனக் காட்சி நல்கினார் சிவபெருமான். ஆகவேதான், இந்த நாளில் இறைவனுடைய நடராஜத் திருக்கோலத்தை தரிசிக்கிறோம்.

ஏராளமான சிறப்புகளோடும் கடவுள்தன்மையோடு துலங்குகிற மாதமே, மாதங்களில் தலையாயதான மார்கழி.

மார்கழி மாதத்தைச் சிலர், ‘பீடை மாதம்’ என்று புறந்தள்ளுகின்றனர். கல்யாணம், புதுவீடு புகுதல் போன்ற சுப நிகழ்வுகளை இம்மாதத்தில் நிகழ்த்துவதில்லை என்பதையும் சேர்த்துக்கொண்டு, பீடை மாதம் என்பதற்கு இன்னும் சிலர் ஆதரவு தேடுகின்றனர். பேச்சு வழக்கில், சொற்கள் சில சிதைந்துபோகும். பேச்சு வழக்கின் வேகம் காரணமாகப் ‘பீடை மாதம்’ என்னும் தவறான பிரயோகம் வந்துவிட்டது.