சென்னை-வாலாஜா இடையிலான நெடுஞ்சாலையில் 50 சதவீதம் மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூருவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளாக முறையான பரமாரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது.
இதனால் நெடுஞ்சாலையின் பல இடங்களில் குண்டும், குழியுமாகவுள்ளது. இவை அதிக விபத்துக்களுக்கு காரணமாக அமைந்து வருகின்றன. இது தொடர்பாக பல தரப்பில் இருந்தும் புகார் அளித்தும் இதற்கான எந்த நடவடிக்கையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எடுக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக இந்த சாலை மேலும் மோசமான நிலையை எட்டியது. இதுதொடர்பாக புகார்களையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் மதுரவாயல்-வாலாஜா வரையிலான சாலை முறையான பராமரிப்பில் இல்லாதது குறித்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது மதுரவாயல்-வாலாஜா சாலையின் நிலை குறித்த போட்டோ ஆதாரங்கள் நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது.
தேசிய நெடுச்சாலையின் இந்த நிலையை பார்த்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் ஏன் சாலை பராமரிக்கப்படவில்லை என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, அடுத்த 10 நாட்களில் மதுரவாயல்-வாலாஜா சாலை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மதுரவாயல்- வாலாஜா இடையிலான இரண்டு சுங்கச் சாவடிகளில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் 50 சதவீதம் மட்டுமே வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.