இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்கா முப்பதுவெட்டி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெறும் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாமை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஸ்பராஜ் அலுவலக காரில் அதிகாரிகளுடன் சென்றார். ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆற்காடு நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆட்சியர் வாகனம் சென்ற போது ஒருவழிப்பாதையில் ஆட்டோ ஒன்று அதிவேகமாக வாகனத்தை மோதும் அளவிற்கு வந்தது.
உடனே சுதாரித்த ஆட்சியரின் வாகன ஓட்டுநர் காரை நிறுத்தி விட்டார். அதைத் தொடர்ந்து ஆட்சியரின் உதவியாளர், காவலர் சென்று ஆட்டோவை தடுத்து நிறுத்தி ஆட்டோ ஓட்டுனரை ஆட்சியரிடம் அழைத்து சென்றனர். ஒருவழிப் பாதையில் அதிவேகமாக வந்த ஓட்டுனரை கடுமையாக எச்சரித்த ஆட்சியர், ஆட்டோவை சரியான பாதையில் வரச்சொல்லி திருப்பி அனுப்பினார். 

பின்னர் அங்கிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் நடைபெற்ற முகாம்களை ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், " மாவட்டத்தில் தற்போது 10 லட்சத்து 3 ஆயிரத்து 287 வாக்காளர் உள்ளனர். சிறப்பு முகாம்கள் மூலமாக 26,687 படிவங்கள், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தத்துக்காக வந்துள்ளன. இந்த படிவங்கள் அனைத்தும் கணினி மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன, அதை வீடு வீடாக சென்று அதிகாரிகள் சரிசெய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். சிறப்பு முகாமில் வருகின்ற டிசம்பர் 15- ஆம் தேதி வரை படிவங்கள் பெறப்படும். அதைத் தொடர்ந்து ஜனவரி 20- ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்" என்று கூறினார்.