ஆற்காடு அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம் 
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி என்ற பகுதிக்கு அருகே சாலை ஓரத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் எட்டு பேர் காயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தனியார் பேருந்து மூலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர் அப்போது செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி அருகே பேருந்து நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் பேருந்து ஓட்டுனர் சந்திரன் (45), ஜெயக்குமாரி (50), சுமித்ரா (50), பிரேமாவதி (53) ஆகியோர் காயமடைந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று வேலூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மது, பாலாஜி, ரவி, கோவிந்தன் ஆகியோர் லேசான காயங்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த விபத்து குறித்து ஆற்காடு நகர காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.