ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகன விபத்து: மூன்று பேர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டை அருகே வானாபாடி கிராமம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரத் பாபு (40). இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் லாலாபேட்டையில் இருந்து அம்மூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அம்மூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அருண்குமார் தனது சகோதரியை கல்லூரியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு லாலாபேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அதிவேகமாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் வானாபாடி கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அருண்குமார், சரத்பாபு மற்றும் அவரது நண்பர் என மூன்று பேர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த அருண்குமாரின் சகோதரி வைஷ்ணவி மற்றும் ஆனந்தன் ஆகிய இருவர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு தலைமையிலான காவல்துறையினர் சாலையில் கிடந்த சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.