ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு மேலக்குப்பம் செல்லும் சாலையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மதுபான கடையை அகற்றக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மேலும், பாமக கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு மதுபான கடையை எதிர்த்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். திடீரென சாலை மறித்து மதுபான கடை முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள், "மதுபானக் கடைகள் சமூகத்தில் குற்றச்செயல்களை அதிகரிக்கின்றன. குடும்ப அமைப்பை சீர்குலைக்கின்றன. எனவே, மதுபானக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் மதுபானக் கடை அகற்றப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.