ராணிப்பேட்டை அருகே வானாபாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவர் வானாபாடி ரோடு தனியார் பள்ளி அருகே 10 ஆண்டுகளுக்கும் மேலாக டீக்கடை நடத்தி வந்தார். கடந்த 10ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் வழக்கம் போல் டீக் கடையை திறந்தார்.

அப்போது காஸ் சிலிண்டரில் இருந்து காஸ் லீக்காகி கடை முழுதும் பரவிருந்தது. இதையறியாமல் செல்வராஜ், மின் விளக்கு எரிய ஸ்விட்ச் போட்டுள்ளார். இதனால் காஸ் திடீ ரென தீப்பிடித்ததில், செல்வராஜ் மற்றும் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் ராதாகிருஷ்ணன்(55), வேணு(45), சேட்டு(70), சேகர்(60) ஆகியோர் தீக்காயமடைந்தனர்.
இதில் பலத்த தீக்காயத்துடன் செல்வராஜ் வேலுார் சிஎம்சி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் நேற்று முன்தினம் இரவு இறந்தார். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.