Power board officer suspended for taking bribe from farmers in Arakkonam!

அரக்கோணத்தில் விவசாயிகளள் மற்றும் பொதுமக்களிடம் மின் இணைப்புகளுக்கு தொடர்ந்து லஞ்சம் வாங்கியதாக தெரிவிக்கப்பட்ட புகாரில் உதவி பொறியாளர் எழில்பாபு (49) என்பவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் மின்வாரிய அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரக்கோணம் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கும்பிணிப்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்பவர் எழில்பாபு (49). அரக்கோணத்தை சுற்றியுள்ள ஈசலாபுரம், பாலகிருஷ்ணாபுரம், கும்பிணிப்பேட்டை, இச்சிபுத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வேண்டி பொதுமக்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களிடம் பணம் கொடுத்தால் தான் மின் இணைப்பு வழங்கப்படும் என எழில்பாபு கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் அப்படி கையூட்டு கொடுத்தவர்களுக்கு மட்டும் உடனடியாக இணைப்பு வழங்கியுள்ளார். இதில் விரக்தியடைந்த விவசாயிகள் சிலர் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, மின்வாரிய அமைச்சர், மின் வாரிய உயரதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். இந்த புகார் தொடர்பாக அதிகாரிகள் எழில்பாபுவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து புகாரில் உண்மையிருப்பது தெரியவந்ததை தொடர்ந்து நேற்று வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் பொறியாளர் எழில்பாபுவை உதவி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கும்பிணிப்பேட்டை மின்வாரிய உதவி பொறியாளர் எழில்பாபு சஸ்பெண்ட் செய்யப்பட்ட செய்தியறிந்த அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மின்வாரிய அலுவலகம் முன்பு திரண்டு பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.