எந்த மரத்தடி பிள்ளையார் என்ன பலன் தருவார்:


வன்னிமரப் பிள்ளையார்:


இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வலஞ்சுழியாக வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு.

அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும்.

புன்னை மரப் பிள்ளையார்:


ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால், தம்பதியர்களிடையே உள்ள மனக் கசப்பு நீங்கும்.

மகிழ மரப் பிள்ளையார்:


இந்தப் பிள்ளையாருக்கு, அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்தால், பணிக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர்.

சந்தனமரப் பிள்ளையார்


மிகமிக அபூர்வ விநாயகரான இவருக்கு சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் பசும்பால் கொண்டு அபிசேகம் செய்து வழிபட அரிய அபூர்வ சாதனைகளை நிகழ்த்தும் வலிமை கிடைக்கும். புதியதாக ஆரம்பிக்கும் வியாபாரம் அமோகமாக நடைபெறும்.

மாமரப் பிள்ளையார்:


இந்தப் பிள்ளையாருக்கு கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு, ஏழை சுமங்கலிகளுக்கு உடை, உணவு அளித்து வந்தால், கோபம், பொறாமை, பகைமை மாறி, பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர் பெறும்.

வேப்ப மரத்து விநாயகர்:


இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் கிழக்கு நோக்கி இருப்பது சிறப்பு.

உத்திரட்டாதி நட்சத்திர நாளில், தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் கன்னியருக்கு மனம் போல் மாங்கல்யம் கிட்டும்.பஞ்ச தீபம் ஏற்றி வழிபட மனதிற்கு பிடித்த வரன் அமையும்.

ஆலமரப் பிள்ளையார்:


ஆலமரத்தின் கீழ், வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு, நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னங்களை நிவேதனம் செய்து, தானமளித்தால் கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.

வில்வ மரப் பிள்ளையார்:


இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் தெற்கு நோக்கி இருப்பது சிறப்பு. வியாழன், புதன் கிழமைகளில் சந்தனத்தால் அலங்காரம் செய்து வழிபட படிக்க பிடிக்காத பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தன்று, இவ்விநாயகருக்கு வழிபாடு செய்து ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் அளித்து, வில்வ மரத்தைச் சுற்றி வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.

நாவல் மரப் பிள்ளையார்


இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. ரோகிணி நட்சத்திரம் அன்று புனித நதிக்கரையில் ஏழைச் சிறுவர்களுக்கு வெண்ணெய் தானம் அளித்து இவரை வழிபட்டு வர பிரிந்த தம்பதியினர், குடும்பங்கள், உறவுகள் ஒன்று சேருவர்.

இலுப்பைமரப் பிள்ளையார்


ரேவதி நட்சத்திரம் அன்றும், செவ்வாய் கிழமைகளிலும் இவருக்கு பசுநெய் கொண்டு தீபம் ஏற்றி மஞ்சள் நிற ஆடைகளை 10 வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கு அளித்து வர தனித்த வாழும் முதியவர்கள், பெண்களுக்கு தற்காப்பு சக்தி கிடைக்கும். மிகஉயர்ந்த கட்டிடம் கட்டுபவர்கள், எந்தவித விபத்துக்கள் இன்றி- நஷ்டம் இன்றி அதை கட்டி முடிக்க முடியும்.

அரச மரப் பிள்ளையார்:


இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு.

பூச நட்சத்திரத்தன்று இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்தால், விளைபொருள் மற்றும் பூமியால் லாபம் கூடும்.பணக் கஷ்டம் தீரும்.

பிணம் மீட்ட பிள்ளையார்:


அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் குங்கிலியக்கலயநாயனார். இவர் மகன் இறந்து விட்டான். அவனது உடலை தகனம் செய்ய எடுத்துச் செல்லும் போது விநாயகப் பெருமான் வழி மறித்து, நாக கன்னிகை தீர்த்தத்தில் நீராடிச் செல்லுமாறு, கட்டளையிட்டார்.

பிறகு அவர்கள் வீடு வந்து சேர்ந்ததும், இறந்த மகன் உயிர் பெற்று வந்தான். கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 20 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பனந்தாள் திருத்தலத்தில் இந்த பிணம் மீட்ட விநாயகரை, தரிசிக்கலாம்.

நெல்லிமரப் பிள்ளையார்


பரணி நட்சத்திரம் அன்று இவருக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு 108 விளக்குகள் ஏற்றி ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்தால் இரும்பு தொழில் அமோகமாக நடைபெறும். பெண் குழந்தைகளுக்காக ஏங்குபவர்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்கும். மன சாந்தி கிட்டும்.