ஆற்காடு ஒன்றியம், சாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அந்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
சாத்தூர் ஊராட்சித் தலைவராக இருப்பாவர் சா.மா.சேட்டு. இவர், ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகள், 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் எதையும் செய்யாமல், தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், இதனால் ஊராட்சி நிர்வாகம் முடங்கியுள்ளதாகவும் கூறி, அதிகாரிகளுக்கு மனு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதன் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாத்தூர் ஊராட்சி துணைத் தலைவர் இளங்கோ தலைமையில், வார்டு உறுப்பினர்கள் சுதாகர், சி.குருநாதன், பி.கம்சலா, எம்.தெய்வானை, எம்.கலைவாணி, கே.வசந்தி ஆகியோர் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதேபோல், சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்க, தங்கள் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரனிடம் மனு அளித்தனர்.