ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ் கரபாண்டியன் தலைமையில் நடந்தது. அப்போது கலெக்டர் பேசியதாவது:
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும். 100 நாள் வேலை பணியாளர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்ய வேண்டும். இதை பிடிஓகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து, வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டும், பொதுமக்களின் பங்களிப்பு செலுத்தப்படாத காரணத்தால் ராணிப்பேட்டை மாவட்டம் பின்தங்கிய நிலையில் உள்ளது. அனைத்து யூனியன்களிலும் பங்களிப்பு தொகை செலுத்துவதை பிடிஓகள் உறுதி செய்ய வேண்டும். வரும் 30ம் தேதிக்குள் இதை முடிக்க வேண்டும். பஞ்., தலைவர்கள் கூட்டம் போட்டு இதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். வாரந்தோறும் இதற்கான அறிக்கையை தலைமை செயலாளருக்கு அனுப்ப வேண்டியுள்ளது.

தனியார் இடங்களில் உள்ள கருவேல மரங்களை அதன் உரிமையாளர் அகற்றவில்லை என்றால் அலுவலர்கள் அதை அகற்றி அதற்கான செலவினத்தை உரிமையாளரிடம் பெற்று சரி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.