ஆகஸ்ட் 04.08.2022 சுபகிருது வருடம், ஆடி 19, வியாழக்கிழமை, சித்திரை நட்சத்திரம் மாலை 06.47 வரை 

ஆடி சித்திரை நட்சத்திர நன்னாளான இன்று சக்கரத்தாழ்வாரை மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்களை நடத்தித் தந்திடுவார். மங்காத செல்வங்களை வாரி வழங்கிடுவார்!

சக்கரத்தாழ்வாருக்கு உரிய நட்சத்திரம் சித்திரை. ஆனி மாத சித்திரை நட்சத்திரம் சக்கரத்தாழ்வார் ஜென்ம ஜயந்தித் திருநாள். மாதந்தோறும் வருகிற சித்திரை நட்சத்திர நன்னாளில், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

எல்லா பெருமாள் கோயில்களிலும் சக்கரத்தாழ்வாரு க்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கும். ஸ்ரீரங்கம் கோயிலின் சக்கரத்தாழ்வார் மிகுந்த சாந்நித்தியம் மிக்கவர். அரங்கனைத் தரிசித்து வழிபடுவதற்கு வாரந்தோறும் பக்தர்கள் தொடர்ந்து வருவது போல், வாரந்தோறும் சக்கரத்தாழ்வாரை தரிசித்துப் பிரார்த்திக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சுதர்சனச் சக்கரத்தின் வடிவம் எத்தகையது தெரியுமா?


சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக்கூடியது. அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்துமாகவும் இருக்கிறது.

சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. 

நம் வாழ்வில் நமக்கு வருகிற எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல் லாம் தகர்த்தருள்கிறார் சக்கரத்தாழ்வார்.
சக்கரத்தாழ்வாரை மனதார வேண்டுங்கள். வீட்டில் விளக்கேற்றி, ஆத்மார்த்தமாக வழிபடுங்கள். தினமும்

ஓம் சுதர்ஸனாய வித்மஹே.
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரஸோதயாத்:

என்று முடிந்தபோதெல்லாம் சொல்லுங்கள். தினமும் 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 அல்லது 108 முறை என முடிந்த அளவுக்கு சொல்லி சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள். எதிர்ப்புகளையும் தடைகளையும் தகர்த்து அருளுவார்.

ஆடி சித்திரை நட்சத்திர நன்னாளான இன்று சக்கரத்தாழ்வாரை மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்களை நடத்தித் தந்திடுவார். மங்காத செல்வங்களை வாரி வழங்கிடுவார்!