கலவை அருகே கட்டிடம் இடிந்து விழுந்து வேலூர் தொழிலாளி பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டியுள்ள கடைகள் அனைத்தும் கடந்த 15ம் தேதி நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை காவல்துறை பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.

அப்போது, ஒருசில கடை உரிமையாளர்கள் தாங்களாகவே 15 நாட்களுக்குள் இடித்துக் கொள்வதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர். அதன்பேரில், கட்டிடங்களை இடிக்காமல் சென்றனர்.அதனை தொடர்ந்து விடுபட்ட கட்டிடங்களை அவர்களாகவே கூலி ஆட்களை வைத்து இடித்து வந்தனர். கடந்த 2 நாட்களாக கட்டிடத்தை வேலூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (32), ஆம்பூர் பகுதியை சேர்ந்த பாலு (30), பூபாலன் (33) உட்பட மூன்று பேர் இடித்துக் கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக கட்டிடம் சரிந்து விழுந்ததில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் சரிந்து விழுந்த கட்டிடத்தின் அடியில் சிக்கிய ஜெகதீஷ், பூபாலன் ஆகிய இருவரையும் மீட்டு மாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்கு அனும தித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லேசான காயமடைந்த பாலு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுதொடர்பாக வாழைப்பந்தல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகதீஷ்(32), சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த வாழைப்பந்தல் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ் சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தார். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளார்.